
அணிலோ
கிளி ஒன்றோ
வருமென காத்திருக்கிறது
இடி தாக்கிய
ஒற்றைப் பனை மரம்...
காகங்களே இல்லா
உலகொன்றில் நதியென
நானும்
அகத்தியனின் கமண்டலமாக
நீயும்..
திருவிழா கால
குழந்தைகளாடும்
குடை ராட்டினத்தில்
புலியை துரத்துகிறது
மானொன்று...
கண்ணாடிக் கூண்டுக்குள்
அலைந்து கொண்டே
இருக்கின்றன
கலர் மீன்களும்
கடிகார முட்களும்...
என் மரணம் பற்றி
எனக்கு தெரியும்
காதல் முடிந்து கனவுகள் முடங்கி
எங்கே எப்பொழுது
இது மட்டுமே ரகசியம்...
என்னால் வரிசையாக
அடுக்கப்பட்ட விண்மீன்கள்
எரிகற்களாய் மாறிப் போய்
கிழே விழுகிறது
சிரிக்கிறது நிலவு...
அதிகம் சிரிப்பவனும்
அதிகம் சிரிக்கவைப்பவனும்
தன்னுள்
அடங்காத துயரத்தை
வைத்திருக்கிறானோ என்னவோ...
உன் வீட்டுக் குப்பைத்
தொட்டியில் கிழித்துப்
போட்ட கடிதங்கள்
அனைத்தும் எனக்காக
நீ எழுதியவை...
பேசத் துடித்து
தனித்திருக்கும் உனக்கு
உன்னுடன் மட்டும்
பேசும் மொழியொன்றில்
கவிதைகளை அனுப்புகிறேன்
இவை பேசும்...
அதிகாலை கவிதைகள்
விடியலோடு கரைந்து போகிறது
எனினும் காலவெளிகளில்
கலந்து இருக்கும்
ஒரு கருவைப் போல...
No comments:
Post a Comment