
கதவுகளை இறுகச்சாத்திவிட்டாய்
நான் உள்ளே வருவதெப்படி?
உடைத்து வந்தாலோ
உடைந்த கதவுகள் பற்றியே
சீற்றம் வருகிறது
உன் கதவுகளுக்குரிய சாவி
இப்போது என்னிடமில்லை
சாவியில்லாமல் பூட்டுடைக்க
எனக்கும் இஷ்டமில்லை
சாவிகள் கிடைத்தாலும்
உன் விருப்பின்றி
ஒருக்காலும் திறவேன் நான்
திறக்கும் என
நிலவின் இராத்திரிகளிலும்
நிலவை விடியல் தின்றபின்னும்
உன் கதவருகில்
காத்திருந்த நான்
தற்போது
எழும்பிப் போய்க்கொண்டிருக்கிறேன்
என் வெறுமை இப்போது
பரந்த வெளிகளால்
நிரப்படுகிறது
சிறு புள்ளியாகி
மறைந்துகொண்டிருக்கிறது
உனக்கும் எனக்குமிடையிலான
மூடிய கதவு
விதிகள் உடைபடும் சப்தம்
காலின் கீழ்
நீ கதவு திற!
பொறுக்கிச் சேகரித்த
பழைய சாவிகளெல்லாம்
அந்த வாசலில்
வைத்திருக்கிறேன் நான்
காற்றாகிவிட்ட மனதிற்கு
கதவுகள் இனி எதற்கு?
மிக அழகு
வெளி நிலவு!
கதவற்ற பிரபஞ்சம்!
திறந்த பூமி!
நான் போய்க்கொண்டிருக்கிறேன்
-கவிதா. நோர்வே
http://www.vaarppu.com/view/2592/
1 comment:
அழகு கவிதை.
வாழ்த்துகள்.
Post a Comment