
எப்பொழுது தேவைப் படுவதில்லை தான்
ஆனாலும் உபயோகித்திருப்பாய்
மின்சாரம் தொலைத்த பொழுதொன்றில்
மெழுகுவர்த்தி ஒன்றை....
முழுமையான வெளிச்சத்தை
தருவதில்லை எனினும்
அடையாளம் காட்ட உதவும்
சிறு தீபமென...
மெல்லிய காற்றின் சீண்டல்களில்
கூட அசைந்து துடிக்கிறது
அதன் மெல்லிய தீ நாக்கு
ஒரு நடனத்தை குறியிட்டு...
அழுது வடியும் கண்ணீரையோ
உருகி கரையும் உடலையோ
ரசிக்கிறோமே இன்றி
கவலைப் படுவது இருளைப் பற்றியே...
வீட்டில் ஒருவராவது இருக்கிறார்கள்
மெழுகுவர்த்தியினை வெளிச்சமென
நினைக்காது ஒரு தியாகத்தின்
உண்மை பொருளை உணர்ந்தவராய்...
தேவாலயங்களிலும்
பிறந்த நாள் விழாக்களிலும்
காணக் கிடைத்தாலும்
அங்கே சிறப்பு அவற்றுக்கில்லை...
மின்தேக்கிகள் நடைமுறைக்கு
வந்த பின் அதிகம்
மறக்கப் பட்டவை
சிம்னி விளக்கும் மெழுகுவர்த்தியுமே...
நான் எழுதிக் கொண்டிருப்பது
மெழுகுவர்த்தியை பற்றி என
நீ தவறாக நினைத்தால்
அது என் தவறல்ல...
No comments:
Post a Comment