
குளிர் சாரல்
நுரை பொங்கும் அருவி
தாவிக் குதிக்கிறது தண்ணீர்
கணவனோடு கைகோர்த்து
உச்சியில் நீர் விழும் பொழுது
உன் கால்களினடியில் மூச்சிரைத்து
சாகிறது என் காதல்
ஓடும் நீரோடு இரு துளி
கண்ணீர் கலந்து
மன்னிப்பை கூறுவாய்
துண்டுகளாய் சிதறிய
இதயத்திடம்...
என்னிடம் ஆயிரம்
கேள்விகளுண்டு
உன்னிடம் ஒற்றை பதில்
அதுவும் எனக்கானதாய் இல்லை
புன்னகைக்கும் உன்
உதடுகளின் ஓரத்தில்
நீ குவித்து வைத்திருந்த
நஞ்சு
எனக்கானதாய் இருக்கிறது...
என் பாடலின்
ஒவ்வொரு பல்லவியும்
சரணமும்
முகாரியிடம் மண்டியிடுவது
ஏனென்று தெரியவில்லை
கனவுகள் மட்டுமே
வாழ்வென ஆன பின்
உறக்கத்தை தொலைத்தவன் நான்...
இந்த வெறும் வார்த்தைகள்
செவிகளை எட்டப்போவதில்லை
அருவியின் சாரலில்
லயித்து கிடக்கும் உனக்கு
நிஜங்கள் துரத்தும் ஒரு நாளில்
நீயும் நானும்
பேசப் போவதில்லை
ஆனாலும் இந்த வரிகள் பேசிடும்
நீரின் குளுமையையோ
நம் நேசத்தையோ...
No comments:
Post a Comment