பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 22, 2011

அவதூறு பேச்சாளி

ஒரு சிற்றாறிடம்
கடலைப் பற்றி
ஒரு முறை பேசினேன்
என்னை ஒரு
மிகைப் படுத்தி பேசும்
கற்பனாவாதி எனச்
சிற்றாறு நினைத்தது!

சிற்றாறைப் பற்றி
கடலிடம்
ஒருமுறை பேசினேன்
குறைத்துப் பேசும்
அவதூறு பேச்சாளி என
கடல்
நினைத்தது!!

ஒவ்வொரு
உயர்ந்த மனிதனும்
அவனது முடிவெடுக்கும்
தன்மையில்
ஏதாவதொரு சிறிய ஒன்று
இருக்கும் என
நான் அறிவேன்!
அந்த சிறிய ஒன்று தான்
அவர்களது
செயலற்ற தன்மையை
பித்துக்குளித் தனத்தை
அல்லது
தற்கொலையினை
தடுத்திருக்கிறது!!

யார் நிரபராதி?

நுழைவாயிலில்
எனது விருந்தாளியை
நிறுத்திச் சொன்னேன்
இல்லை;
நீ நுழையும் போது
உன் பாதத்தை
துடைத்துக் கொள்ளாதே;
ஆனால் நீ
வெளியே சென்றவுடன்
துடைத்துக் கொள்;

உனது தேவையாய்
இருப்பதை விட
எனக்கு அதிகம் தேவையாய்
இருப்பதை கொடுப்பதல்ல
கொடை!
என்னை விட உனக்கு
அதிகம் தேவையாய் இருப்பதை
எனக்கு கொடுப்பதே
கொடை!

ஒரு நாள் பசிக்கும்
ஒரு மணி நேர தாகத்திற்கும்
இடையில் உள்ள
வித்தியாசம் தான்
பெரும் பணக்காரனுக்கும்
பரம ஏழைக்கும்
இடையிலுள்ள
வித்தியாசம்...

உன் அறிவுக்கு
எட்டிய மட்டும் தான்
உன்னால்
மற்றவரைப் பற்றி
எடை போட முடியும்
இப்பொழுது சொல்!
நம்மில் யார்
குற்றவாளி
யார் நிரபராதி?

இங்கு
மிகச் சிறந்த ஒழுக்கமாய்
இருக்கும் ஒரு
நற்குணம்
மற்றோர் உலகத்தில்
மிகத் தாழ்ந்த ஒன்றாக
இருக்கலாம்...

Sep 21, 2011

ஒரு நாளின் பின்பகல்


செல்லரித்துப் போன
காகிதமென
கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்து போகுமோ
உன்னில் என் நினைவுகள்...

தேவைப்படும் என
தேக்கி வைக்காதே
இயல்பான ஒரு நதியின்
நீரோட்டத்தைப் போல
இயல்பாய் இருக்கட்டும்...

புகைப் பட காட்சிகளென
நிறைத்து
யாதேனும் ஒரு மழைநாளிரவில்
யதேட்சையாய்க் கையிலெடுத்து
கோடை வரை ரசித்திருப்பேன்
நம் நினைவுகளை....

உயிர் பிரிந்து வெளியேறும்
தருணத்தில் புலப்படாத
மெல்லிய ஓசைகளை மீறி
ஒலிக்கும் என் கவிதைகளை
நீ
வாசிக்கும் உதடசைவுகள்...

உண்ணவும்
உறங்கவும் மறக்கலாம்
அடிக்கடி மறக்க
நினைக்கும்
நம் நாட்களைத் தவிர
எல்லாவற்றையும்...

நீ வீட்டுப் போன
எழுத்துக்களில் நான் கவிதை
மொழிகளில் நான் இசை
வர்ணங்களில் நான் ஓவியம்
சுவாசத்தில் நான் தென்றல்
அன்பில் நான் மனிதனாய்...

மொத்தமாய்
ஒரு நாளின் பின் பகல் பொழுதுகளில்
சிரித்துக் கொண்டே பேசி
உன்னிடமிருந்து
பிரித்து வைத்தாய்
கண்களில் நீர் மறைத்து
மனதில் வலி மறைத்து
உன் வரவிற்காய் காத்துக் கிடந்த
காலங்கள் மறைத்து
உன்னோடு வாழ்ந்த
கனவுகளை மறைத்து
.......
....
...

இப்படி
எதுவுமே தேவை இருந்திருக்காது
என் காதலை
உன்னிடம்
மறைத்திருந்தால்....

உதட்டுக்கு வராத முத்தம்...

தோழா...
எப்படி
உன்னால்
சொல்ல முடிந்தது
என்னிடம்?

கல்லூரிப் பாடத்திலிருந்து
காண்டம் ஜோக்
வரையிலும்
பகிர்ந்து கொண்டவன் நீ!

நம் பரஸ்பர
ரசனைகள் பற்றி
பட்டியலிட
பக்கங்கள் போதாது....

கல்லூரி வாரவதியில்
கால நேரமற்று
பேசிக் கொண்டிருந்து
பதறிப் பிரிந்த போதும்...

கடற்கரையில்
விரல் கோர்த்து
அலையில்
நனைந்த போதும்...

வேடிக்கையாய்
என் கன்னத்தில்
வேகமர்றுத்
தட்டிய போதும்...

புறங்கையில்
பூப் போல
நீ இட்ட முத்தத்தின்
போதும் கூட
நான் நினைத்த தில்லை
இப்படி
சொல்லப் போகிறாய்
என்று?

நிறைய
தோழிகளின் காதலுக்கு
பாலமாய் இருந்திருக்கிறேன்
என்பது உண்மைதான்...

ஆனாலும்
நீயும் கூட
உன் காதலை சுமந்து சென்று
மற்றவரிடம் சேர்க்குமாறு,
எப்படி சொல்ல முடிந்தது
என்னிடம்?

எப்போதும்
தூது பெண்களுக்கு
ஏனோ
அமைவதில்லை
காதல்....

- உமா சம்பத்