பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 11, 2011

முத்தங்கள்....


அதிகாலை வேளை
நெற்றியின் மீது
மென்மையாக இதழ் பதித்து
என்னை துயில் நீக்குவதில்
துவங்குகிறது
என் ஒவ்வொரு நாளும்....

வெட்கத்தோடு

நீ முத்தம் கேட்க
அன்றைய தினத்தின்
என் நாட் குறிப்பு
சிவந்து போய் கிடக்கிறது...

இரைக்கு காத்திருக்கும்

ஒரு புலியின் வேட்கையோடு
எப்பொழுதும் உன் உதடுகளில்
பதுங்கி இருக்கிறது
எனக்கான முத்தங்கள்....

எனக்கு தெரியாமல்

பின்னால் வந்து கட்டியணைத்து
கழுத்தில் புதைந்து
இதழ் பதிப்பாய்...
உலகின் போதை மாத்திரைகளுக்கு
மொத்தமாய் நீ விடும் சவால் அது...

மென்மையாய் தொடங்கி

வன்முறையில் குருதி
வழிய...
கைக் குட்டையில் இரு நாட்கள்
உதடு மறைத்த
ஒரு நினைவும் கூட...

ஒவ்வொரு முறை நீ

வெளி கிளம்புகையில்
என்னை அழைப்பாய்...
எனக்குத் தெரியும்
என் கன்னங்களில் ஈரத்தோடு
நான் திரும்புவேன் என்று...

ஏகாந்த இரவொன்றில்

கேட்டாய்...
கொடுத்த முத்தத்தில்
பிடித்த முத்தம் எதுவென?
இன்னும் கொடுக்காமல்
நீ மிச்சம் வைத்திருக்கும்
முத்தமென்றேன்....
தொடங்கி விட்டாய்
இதற்காகத் தானே காத்திருந்தாய்....

Jun 8, 2011

கனவுகளின் சொந்தக்காரன்


அன்பு தோழனே!!!
நலமா?
நள்ளிரவு பொழுதுகளில்
மெல்லிய இசையோடு என் உறக்கம்
தொலைத்த இரவுகளுக்கு காரணம்
உன் நினைவுகள் என்பதை
பகலில் உன்னிடம் சொல்ல
முடியுமா என்ன?

என் காதுகளில் மென்மையாய்
இசைக்கிறது சுசீலாவின்
"உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்"
நினைவுகள் உன்னை சுற்ற தொடங்குகிறது...

பதின் வயதில் நான்
தொலைத்து விட்ட என்
மெல்லிய உணர்வுகளை...
இதயம் வருடும் கவிதைகளை, காதலை...
என்னிடமிருந்து எனக்காய்
மீட்டுத் தந்தவன் நீ...

உறவுகளின் பாசமும்
நட்பின் அரவனைப்புமாய்
வாழ்ந்த என்னில்
பரிதவிப்பின் சுகத்தையும்
காத்திருத்தலின் துடிப்புகளையும்
கற்றுக் கொடுத்தவன் நீ...

பேசி சிரித்த
சில நாட்களுக்குள்
உன்னை பிரியும் சில நொடிகளுகாய்
கண்ணீர் நிறையும் விழிகளை
எவ்வாறு உண்டாக்கினாய்?

எனக்குள் ஒளித்து வைத்த
ஒருத்தியை
எனக்கே தெரியாமல் வெளிக் கொணர்ந்து
என்னிடமே அறிமுகப் படுத்தினாய்...
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்?

மலர்களை,
பனித் துளியை,
மழையின் குளுமையை,
நதியின் சலசலப்பை,
விண்மீன் கூட்டங்களை ரசிப்பவள் தான்...
யாரிடமும் சொல்லியதில்லை...
உன்னிடம் மட்டும் என் இந்த மாற்றம்?

மடியில் உறங்குவது போல நடிக்கும்
என் கையில் வளையல்களை
எத்தனை முறை எண்ணிக் கொண்டிருப்பாய்
காதோர சுருள் முடிகளை ரசித்துக் கொண்டே...

நெற்றியில் படரும் வியர்வைத் துளிகளை
உன் மெல்லிய முத்தத்தால்
துடைக்கும் முயற்சியில் அதிகம்
வியர்க்கிறது எனக்கு....

முழு நிலா இரவுகளில்
நீ ஊட்டிவிடும் நிலாச் சோறு,
கைகோர்த்த மாலை நேர சிறு நடை,
கனவுகளில் சிணுங்கல்,
தலையணை சண்டை,
எண்ணி முடிக்காத நட்சத்திரம்
இவ்வாறு எனக்கான உணர்வுகளை
தேடும் உன்னை என்னவென்று சொல்ல...

அடை பட்டு கிடந்த
சிறு பறவை ஒன்றின் சிறை கதவுகளை
திறந்து கனவுகளின் வானத்தில்
பறக்க வைத்தவன் நீ..
என் கால்களிலும் கழுத்திலும்
விலகாத நிரந்தர தளைகள்
இன்னமும்...
தெரியும் தானே உனக்கும்?

உண்மையை சொல்வதெனில்....
நீ உணர்வுகளின் காதலன்
நானோ?
நிகழ காலத்தின் கைதியாய்....
இருவரும் பறந்து திரிவோம்
கனவுகளில் மட்டுமாவது....

சற்று திரும்பி படுக்கும் பொழுது
நினைவு வருகிறது நான் இருப்பது
என் நிஜத்தில்....
இன்னும் இசைக்கிறது
சுசீலாவின் குரல்...
"மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ......"

இப்போதைக்கு என்னால்
முடிந்தது ஒன்று மட்டுமே...
கவனமாய் இரு..
ஏனெனில் என் கனவுகளின்
சொந்தக்காரன் நீ...

Jun 3, 2011

அந்த நிமிடம் எது?


நிஜம் என நெருங்கவும் இல்லை..
நிழல் என விலகவும் இல்லை..
காத்திருக்கிறேன்
எனக்காக என்றாவது பொழியும்
என் மேகம்....

சிறகு முளைத்து
உயரப் பறக்கிறேன்
உதிர்ந்து கிழ் விழும் போது
நீ தாங்கிக் கொள்வாய் என்ற இறுமாப்பில்...

நேற்றிரவு நல்ல மழை..!!!
எப்படித் தான் முடிகிறதோ
உன்னால் மட்டும்...
கதகதப்பான ஒரு முத்தத்தில்
என் குளிர் விரட்ட....

கடற்கரையில் சிப்பிகளை
சேகரித்து விளையாடுவேன்
நீ வந்து அலை புகும்
அந்த நொடி வரை...

தூங்காத இரவொன்றில்
கதை சொல்ல யாருமில்லை...
உறவாட உன் விழிகள்
துணையென...

கோவிலின் படிக்கட்டுகளில்
ஏறும் போதும் இறங்கும் போதும்
யாருடன் பேசி சிரிக்கிறது
உன் கால் கொலுசுகள்....

நீ புன்னகைக்கும்
ஒவ்வொரு முறையும் ஏதாவது
ஒன்றை தவறவிடுவேன்
கடந்த முறை தவறியது
நான்....

என்னைப் பற்றி
எழுதிக் கொண்டிருந்தவனுக்கு
உன்னை பற்றி
எழுதக் கற்றுக் கொடுத்த
அந்த நிமிடம் எது?

May 30, 2011

மழைக் குறிப்பு...



பகலெல்லாம் வடிந்து போய்
இரவாகிப்
போனது இன்றைய நாள்...
லேசாக
வெட்டிய மின்னல் கீற்றுடன்
மெல்லிய
தூறலாய் நனைகிறது பூமிப் பந்து....
அசதியாய்
தூங்குகிறாய் நீ
பிள்ளையை
அணைத்துக் கொண்டு...
சப்தமின்றி
கதவு திறந்து
மழை
நுழைகிறேன்
நனைக்கும்
உடையின் ஈரத்தில்
சிலிர்க்கிறது
எனக்கான கனவுகள்...
காலையில்
நிச்சயம் திட்டுவாய்
ஆனாலும்
உன் அக்கறையான கோபத்தை விட
மழைச்
சாரலில் கைகோர்த்து நடக்கத்தான்
என்
மனம் ஆசைப் படுகிறது...
எப்படி
சொல்வது உன்னிடம்?
போனது
போகட்டும்
அடுத்த
மழை வரை சேகரிக்கிறேன்
என்
பால்ய நினைவுகளை மீண்டும்.....