பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 30, 2011

மழைக் குறிப்பு...



பகலெல்லாம் வடிந்து போய்
இரவாகிப்
போனது இன்றைய நாள்...
லேசாக
வெட்டிய மின்னல் கீற்றுடன்
மெல்லிய
தூறலாய் நனைகிறது பூமிப் பந்து....
அசதியாய்
தூங்குகிறாய் நீ
பிள்ளையை
அணைத்துக் கொண்டு...
சப்தமின்றி
கதவு திறந்து
மழை
நுழைகிறேன்
நனைக்கும்
உடையின் ஈரத்தில்
சிலிர்க்கிறது
எனக்கான கனவுகள்...
காலையில்
நிச்சயம் திட்டுவாய்
ஆனாலும்
உன் அக்கறையான கோபத்தை விட
மழைச்
சாரலில் கைகோர்த்து நடக்கத்தான்
என்
மனம் ஆசைப் படுகிறது...
எப்படி
சொல்வது உன்னிடம்?
போனது
போகட்டும்
அடுத்த
மழை வரை சேகரிக்கிறேன்
என்
பால்ய நினைவுகளை மீண்டும்.....

Oct 30, 2007

கோபத்தின் விரல்கள்

தூரத்து விண்மீன் கூட்டங்களை
எண்ணி முடிக்கும் தருணத்தில்
பூஜ்யத்தில் தொடங்கும்
உன் ஸ்பரிசங்கள்
மறக்க செய்கிறது யாவையும்...

பூக்களின் நறுமணத்தை
மூச்சாய் உள்ளிழுக்கும் வேளைகளில்
என்றோ நீ வீசிப்போன
பார்வை சிக்கி
வெளியேறாமல் தவிக்கிறது
உள் சென்ற காற்றுத் துளி....

அமைதியான ஒரு மழை நாளில்
ஆர்ப்பரித்து வரும்
உன் நினைவுகளின் மெளன மொழி
ஆவேசமாய் உடைத்தெரிகிறது
என் கனவு கலங்களை....

என் தோட்டம் நோக்கி வந்த
வண்ணத்து பூச்சியின்
வர்ணங்களை திருடிச் செல்கிறது
உன் கோபத்தின் விரல்கள்...

சில மணி நேர தடங்களுக்காய்
வாழ்க்கையை வெறுக்கத் துடிக்கும்
உனக்காய் நாள்தோறும்
இரவில் அழுகிறது
என் கவிதைக் குரல்...

கண்டதை எழுதுகிறாய்

ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்குமான
இடைவெளியில் செல்லும் ஒரு மரண ஊர்வலம்....

காட்டு குயிலோடு போட்டியிட்டு கூவி
தண்ணீர் தேடும் வீட்டுப் பறவை....

நாள் காட்டியில் விரைவாய் கிழிபடும்
காகிதங்கள் யாருடைய இறுதி நாளைத் தேடி....

இன்று மதியம் உணவு கிடைத்தது
இனி இரவுக்கு யாரைத் தேட...

எழு ஜென்மங்கள் உண்டாம் கொடுமை
எல்லாவற்றிலும் நான் மனிதன் ....

பொதி சுமக்கும் கழுதை போல
நினைவுகள் குட்டிசுவர் தேடி புறப்படுகிறது....

காரமான குழம்பு, ரசம் குடித்து
அதிலும் காரமென தயிர் தேடுகையில்
நிறைந்து விடுகிறது பசித்த வயிறு...

என்னடா இது கண்டதை எழுதுகிறாய்
என்ன செய்ய? சொல்லாமல் விட்டதை நீ புரிந்துகொள்...

Oct 29, 2007

மடல்!!!!!



அன்புள்ள மகளுக்கு,

புன்னகைக்கும் பூவே நலமா....

உன் சின்ன சின்ன சிரிப்புகளோடும்

சிதறிக்கொண்டிருக்கும் நினைவுகளோடும்

தூரமாய் நான்....


நீ சாய்ந்துறங்கும் தோள்களும்

எதிர் தருணங்களில் நீ இதழ் பதித்த

கன்னத்தின் ஈர சுவடுகளும்

மார்பு சூட்டில் கண்ணுறங்கிய தருணங்களுமாய்

தொடர்கிறது என் நொடிப் பொழுதுகள்....


பால் சோறு உண்ணும் போது பங்கு

வைக்கும் செல்ல பூனைக்குட்டி சுகமா?


இல்லத்திற்கு யார் வரும் போதும் உறுமலோடு

உனை அழைக்கும் அன்பு நாய்க்குட்டி சுகமா?


பூ பறிக்கும் பெண்களிடையே சிரிக்கும் மலரை

தொடாமல் ரசிப்பாயே அந்த பூந்தொட்டி சுகமா?


ஜன்னலில் வந்தமர்ந்து உன்னோடு கதை பேசும்

குருவிக் கூட்டங்கள் சுகமா?


வேப்ப மரத்து அணில் சுகமா?


வெயில் விளையாடும் முற்றம் சுகமா?


தண்ணீர் தெளித்து கோலமிட்டு

அழகு பார்க்கும் வாசல் சுகமா?


உன் உறக்கத்தோடு வரும் கனவுகள் சுகமா?


அனைத்தும் சுகம் தானே!!!!


உனக்கு பிடித்த பாடல் வானொலியில்

நீயும் வாயசைத்து பாடுகிறாய் இங்கு...


நீர் குடிக்கும் போதெல்லாம் நினைவில் வருகிறது

"ஜி" என நீ வைத்த புனைப்பெயர்...


வீடு மாறி விட்டதாய் கேள்விப்பட்டேன்

எப்போது வரப்போகிறாய் நம் வீட்டிற்கு...


கூடு கட்டும் பறவை சேகரிக்கும்

சுள்ளிகள் போல சிறிது சிறிதாய் சேர்க்கிறேன்

உனக்கான என் வார்த்தைகளை...


எப்போதும் நாம் விளையாடும்

கண்ணாமூச்சி போல நீ ஒளிந்து கொள்கிறாய்

என் கவிதைகளின் பின்னால்...


உன்னை கண்டு பிடிக்கும் பொழுதுகளில்

காணாமல் போகிறது என் கவிதை...


என்னிடம் இருக்கும் வெற்று தாள்களுக்கு

கனவுகளால் நிரப்பும் கவிதைகளை தந்தவள் நீ...


இறுதியாய் ஒன்று..,

நான் அங்கு வரும் வரையோ

நீ இங்கு வரும் வரையோ

புன்னகையோடு காத்திரு

என்னை விட்டு உன் தாய் உயிர்த்திருப்பது

உன் புன்னகையில் மட்டுமே...


பிரிவுகள் சுகம் தான்

காத்திருத்தல் தவம் தான்

நான் இங்கு காத்திருப்பதற்காக

பிரிந்திருப்பவன்....

இப்படிக்கு,

கை கோர்த்து நடை பழக்கும் நினைவுகளோடு

கனவுகள் சுமக்கும்

மழை காதலன்..