பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 13, 2012

துரோகி...

என்னை துரோகி என்று சொல்
சந்தர்ப்பவாதி என்று முறையீடு
காமுகன் என்று பெயர் சூட்டு
நம்பிக்கை கொல்பவன் என செய்தி பரப்பு
ஆம் நான் அப்படியானவன் தான்
சிறிது நாட்களுக்கு முன்
நான் இப்படியானவன் என தெரிந்திருக்க
நியாயமில்லை தான்
ஏனெனில்
அப்பொழுது
என்னை நேசித்துக் கொண்டிருந்தாய்
நானோ எப்பொழுதும்
ஒரே மாதிரியாக இருக்கிறேன்
பாறைகள் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை
மேகங்கள் உருமாறியபடியே...

நாத்திகன்...

பூக்கள் மலரும் போதும்
பறவைகள் சிறகு விரிக்கும் போதும்
பாம்பொன்று தன் சட்டை கழற்றுதல் போலும்
எந்த வித ஒலியுமின்றி
விரிகிறாய் எனக்குள் நீ...

வாழ்வெல்லாம் துடித்துச்
சாவதை விட
ஒற்றை நொடியில் இறந்து கிடக்கலாம்
சில மாதங்களாவது
நீ என்னை நேசிக்காமல் இருந்திருந்தால்...

கடவுளை தேடுபவன் ஒருவனை சந்திக்கிறேன்
வரும் வழியில் அவன் நாத்திகனாக இருந்தான்
ஒரு திறந்து கிடந்த சன்னலில்
உன் முகத்தை பார்த்திருக்க வேண்டும்
அவன் இனி கடவுளை பார்த்தென்ன...

ஒற்றைப் பனைமரக் கள்ளும் புளித்த மாவடுவுமாய்
அமர்ந்திருக்கும் ஒருவனுக்கு இதெல்லாம் புரியாது
அவனுக்குத் தேவையெல்லாம்
இன்னுமொரு பாட்டிலும்
தன்னிலை மறக்கும் போதையும்...

Jul 12, 2012

முக நூல் 12.07.12



பெயர்களும்
ஊரும்
மறந்து போகிறது
முகம் அப்படியே தான் மனதில்...

மௌனத்தின் பொருள்
பேச எதுவுமில்லை
என்பதாக இருப்பதில்லை...

இன்னமும் கூட
எல்லாக் கனவுகளையும்
புதைத்துத் தான் வைத்திருக்கிறேன்
மனதில்...

நான்
நீ
சேர்ந்தால்
நாம்
பிரிந்தால்
ஞாநி...


 

ஊர் கிணறு...



தினமும் மாலை நேரத்தில்
தோழிகளுடன்
கிணற்றடி வருகிறாய்
நீரிறைத்து
திரும்புகையில்
நிறைகிறது அக் கிணறு... 

உன் பிம்பம் பார்த்தே
தன் தாகம் தீர்த்தது
அக் கிணறு...
 

நீ தோழிகளோடு
பேசிச் சிரித்த கதைகளை
யாருமில்லா நேரத்தில்
எனக்குச் சொல்லிச் சிரிக்கிறது
ஊர் கிணறு...

தெருவின் மூலையில்
நீர்க் குழாய் வந்த பிறகு
உன்னைப் பார்க்காமல்
பாழடைந்து கிடக்கிறது
அதே கிணறு...  

உன் வீட்டிற்குள்
நீர் இணைப்பு வர
தேவைகளே இல்லாமல் போனது
தெருவின் நீர்க் குழாய்கள்... 



நீ திருமணமாகிப் போன
நாளிலிருந்து
பேச்சுத் துணைக்கு
இருப்பதென்னவோ
நீரிறைக்கும் ஊர் கிணறு தான்... 

யாருமே செல்வதில்லை
எனும் போதும்
அக் கிணறு
இன்னும் இருக்கிறது
உன் நினைவுகளையும்
நீரையும்
சுரந்த படி... 

இந்நாளிலும்
சில இரவுகளை
நான் கழிப்பதுண்டு
உனக்கும் எனக்குமான
காதலை
அக்கிணறிடம் சொல்லியபடி...

எல்லா கிணறுகளுக்கும்
தெரியும் தான்
நீரிறைத்த பெண்களின்
முகமும் மனதும்...