பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 15, 2012

சுவடுகள்...

விட்டுச் சென்ற
விருந்தாளியின் புன்னகை
பரிமாறிக் கொண்டிருக்கிறது
அவர்களைப் பற்றிய செய்திகளை...

தூக்குக் கயிற்றின் மீது
ஊர்ந்து நகர்கிறது ஒரு எறும்பு
அதில் பலியாகப் போகிறவனின்
பரிதவிப்பு உணராமல்....

எதிரே குதித்து விளையாடிய
அணில் சொன்னது
உன் கவிதையில்
ஒரு மரத்தை நட்டு வை
அதில் நான் வந்து
விளையாடும் வேளை
நீ உணரலாம்
என் அன்யோன்யம்...

நான் அனுப்பி வைத்த
பொய்கள் எல்லாம்
திரும்பிக் கொண்டிருக்கின்றன
என்னிடமே
இன்னும் சில பொய்களை
அழைத்துக் கொண்டு....

கண்களில் ஆரம்பிக்கும் ஏணி
வானம் வரை நீள்கிறது
இனி என் வீடு வந்து போகும்
நிலவும்
நட்சத்திரங்களும்....

-ராஜா சந்திர சேகர்...

பாய்களின் சத்தம்...

கொத்தித் தின்னும்
நம்பிக்கையின் சிதைவால்
நரகமாகும் பொழுதுகளில்
நகர்கிறது வாழ்க்கை

கையகல மண மேடைக்குள்
முடங்க வேண்டும்
பெண் பிரபஞ்சம்
என்பதான
திராவக வீச்சில்  கருகும்
தாம்பத்யத் தோழமையோடு 
விடியல்கள்...

பிரம்மாஸ்த்திரம்
குருஷேத்திர யுத்தம் என
இணைகோடு
இல்லம்...

தீக் குளிப்புக்கு அப்புறம் வரும்
சகஜ சிரிப்பில்
நெகிழ மறுக்கிறது
அஞ்சரை அடி உயரச்
சதையும் ரத்தமும்
நரம்பும் மனசும்
சுருங்கிவிடுகிறது
அவளின் சகலமும்....

ஆனாலும் கேட்கிறது
அக்கம்பக்கத்தில்
பாய்கள்
விரிக்கப்படும் சப்தம்

இங்கே பலபொழுதும்
விரிகிறது படுக்கை
மனைவியின் மன்னிப்பில்....


- ஆண்டாள் பிரியதர்ஷினி

ஒலிக்காத ஓசைகள்...

அதிகபட்சத் தனிமையில்
ஒலித்துக் கொண்டிருந்த மணியின் நாவினைக்
கட்டிப்போட்டு விட்டு
உனக்கான
இசையை ரசிக்கத்துடிக்கிறாய்
உன் வசதிக்கேற்ப கர்னாடிக் கஜல் என மாற்றி மாற்றி
இசையை ரசிக்க முடிகிறது உன்னால்
பாவம் மணியின் நாவு
ஒரு வார்த்தையேனும் பேசி விடத்துடிக்கிறது
அதன் குரலை நீ கேட்டு ரசிக்க
வேண்டுமாய்
தனக்கான லயத்தில் ஒலித்து விடவும்
முனைகிறது
சன்னல்களையும்
கதவுகளையும் அடைத்தாகி விட்டது
திரைச்சீலைகளையும் இழுத்து விட்டாயிற்று
துளி வெளிச்சமும் வராதபடிக்கு
இருள் போர்த்தப்பட்ட பிறகு
தேடத்துவங்குகிறாய்
சிறு ஒளிக்கீற்றையேனும்
இப்போது கொஞ்சம் மனமிரங்கி
மணியின் நாவை விடுவிக்கிறாய்
வெகு நாட்களாய்க் கட்டப்பட்டிருந்ததில்
பிடி தளர
நாவு கழன்று தரையில் கிடக்கிறது..

May 9, 2012

இன்னொரு உலகம்

நீண்டுயர்ந்த சுவர் முன் நிற்கிறேன்
அது பிரம்மாண்டம்
அது புதிர்
அது வியப்பை எனக்குள் விதைக்கிறது..

சிலர் ஏணியை வைத்து மேலேற முயற்சிக்க
முடியாத சிலரோ சுவரின் காது பதித்து
சப்தமொன்றை ஆராய்கிறார்கள்...

காகிதத்தை எடுத்துக் கொண்டு
தனிமையில் அமர்கிறேன்...
எப்படி இருக்கும் சுவர் மறைத்த மறுபுறம்?

புல்வெளியாக, பாலையாக
கடலாக, பெரு நீர்விழ்ச்சியாக

ஒரு வேளை பகலும் இரவும் இருக்குமா
பகல் மட்டுமே இருக்குமோ
இல்லை இரவு நீளுமோ

போய் பார்த்து விட ஆசை தான்
எனக்கு முன் யார் போயிருக்கிறார்கள்
போய்த் திரும்பியவர்கள் இருகிறார்களா?

அறிந்தவற்றை மட்டுமே சிந்திக்க
அறியா வெளி நிரப்பி அமையுமோ

சூரியனும்
நிலவே இல்லாததுமான
ஒரு சிவப்பு ஆகாயம் விரியலாம்
மொழி இல்லா சைகைகளும்...
அல்லது
உயிர் வாடையற்ற ஒரு
புதை குழி என்னை இழுத்து மூடலாம்...

இக் காகிதத்தை பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
மறுபுறம் செல்லும் முயற்சியில் வென்றால்
அனைவருக்கும் வாசித்துக் காட்டலாம்
அல்லது
என்னையே நான் யாரென்றும் கேட்கும்
மனப் பிறழ்வை அடையலாம்
கொஞ்சம் காத்திரு
திரும்பி நான் வந்தாலும் வரலாம்

எல்லோருக்கும்
இன்னொரு உலகம்
இருக்கிறது.
எல்லோருக்குள்ளும்
இன்னொரு உலகம்
இருக்கிறது...