பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 8, 2012

அதிஜீவனம்

சிறியதென்றாலும்
அதுவும் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறது
ஆனால் சுற்றிலும் அடைத்துக்கொணடபடி
பூக்களையிட்டுக் காட்டியபடி
பிரார்த்தித்த படி

என்றாலும்
இக் குன்றுப் புல்லிற்கு
வேனலினூடே
அதிகம் ஜீவிக்க இயலுமோ?

கொன்றை மரமே கொன்றை மரமே
வெயிலை உருக்கி
ஸ்வர்ணமாக்கி
காதில் அணியும் கலையை
அதற்குச் சொல்லிக் கொடுக்கிறாயா?

ஊஞ்சல் மரமே ஊஞ்சல் மரமே
வேனலை எடுத்து
குளிர்த் தொப்பியாக்கி
தலையில் வைத்துக் கொண்டு விளையாடி
அதை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாயா?

இல்லையெனில்
சிறிதன்றோ என்றெண்ணி
வேனலதை
பசுமைக்குத் திறந்து வீசிவிடும்..
‎(மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த கவிதை)
வேனில் காலத்தைப் பற்றியது..
 

போலிக் கிரீடங்கள்...

எத்தனை இரவுகள் உனக்கான காத்திருப்பில் கழிந்தது என் அன்பே..
எத்தனை பருவங்களின் சுழற்சி
மாறி மாறி வந்து போயிற்று தெரியுமா?
உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
இதோ இந்த நதியின் நீர் வற்றிப் போயிற்று
இதிலிருந்த கடைசி மீனையும்
கொக்கு கொத்திப் போயிற்று
ஒரு விடியலில்
காணாமல் போன சூரியனால்
இருட்டு கவ்விக்கொண்டது
இதய அறையெங்கும்
அழைக்கும் குரல் கேட்காவண்ணம்
உன் செவிகள் திறனிழந்து விட்டன
எதையும் நோக்கவியலா
அந்தகம் உன்னை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது
உன் கிரீடங்களை இறக்கவோ,கழற்றவோ
நீ ஒரு போதும் தயாரானதில்லை
கர்ணனின் கவசகுண்டலம் போல
ஒருவகைக் கம்பீரத்தை
கவனமாய் சுமக்கிறாய்
ஆனால் என் அன்பே...
அதன் கனம் என்னால் தாளவியலாததாக இருக்கிறது....

சொர்க்கத்தின் கதவுகள்


திறப்பதற்கான சாத்தியங்கள் ஏதுமற்று..
வானில் இறுக்கமாக
மிக மிக இறுக்கமாக
மூடப்பட்டு விட்டன
சொர்க்கத்தின் கதவுகள்
ஏகாதசியோ,சிவன் ராத்திரியோ
கிழமைகளுக்குத் தெரிவதில்லை
நாம் அவைகளுக்கு வைத்த பெயர்கள்
எப்போதும் போலே விடிகின்றன
எப்போதும் போலே மடிகின்றன
இதற்கிடையே தான் நமக்குள்ளான
பலப்பரீட்சைகள்..

Apr 27, 2012

நான், சாத்தான், ஒரு தேவதை...

 


சில நாட்கள் நான் தேவதையைத்
தேடி அலைந்தபடி இருந்தேன்
சபிக்கப் பட்ட சாத்தானின் உதவியுடன்

மரத்தின் இலை உதிர்கிறது
தரை நோக்கி விழும் இலையில்
இதுவரை உலகம் காணா ஓவியமும் நடனமும்

காலி சிகரெட் பெட்டிக்குள் அடைபடுகிறது
அந்தரங்கக் கனவுகள் புகையும் துகளென
 என்னையும் உன்னையும் சுமந்தபடி

சாத்தான் சொன்னது இனி நீ தான் அரசன்
நான் உன் அடிமை
விழ்த்திவிடும் முதல் போதை வஸ்து

தரை படிந்து சருகாகி
மக்கி உரமாகலாம் இல்லையெனில்
என் நோட்டு புத்தகத்தில் ஒட்டப்படலாம்

அடைபட்ட காகித அட்டை எரிகிறது
என் கனவுகளை தனதாக்கிக் கொண்டு
புகைகிறது காணும் மனதும் கண்ணும்

அதோ உன் தேவதையென சாத்தான் சுட்டியது
அது தேவதையாகவும் இருக்கலாம்
உருமாற்றம் பெற்ற சாத்தானாகவும் இருக்கலாம்

இலையின் கனக்கிறது தன்னில் ஒரு மரம் கொண்டு
மரத்திற்கு ஒரு இலை தான்
இலைக்கு இன்னுமொரு மரம் சாத்தியமில்லை

மெல்ல மெல்ல சூடாகி அறை முழுதும் தகிக்க
வெந்து போன கனவுகளின் கருகும்
நாற்றமோ வாசனையோ சகிக்கவில்லை

சாத்தான் சிரிக்கிறது
கனவைத் தள்ளிவிட்டு எழுகிறேன்
சுற்றிலும் இரைந்து கிடக்கிறது சாம்பல் துகள்கள்

இந் நேரத்தில் நான் சாத்தானகி இருந்தேன்
ஒரு மரம் என்னுள் விதையாகியிருந்தது
சுவாசமெல்லாம் ஒரு தரம் கெட்ட புகை நாற்றம்

ஒரு தேவதை
ஒரு இலை
ஒரு சிகரெட்
ஒரு பெரும் கனவு
வேறு வழி இல்லை இதற்கும்
கவிதையென்றே பெயர் வை...