பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 8, 2012

ஒரு கோப்பை திரவம்...


கண்ணாடிக் குடுவையில் அடைபட்ட
பொன்னிற திரவத்தை
வெறுமையில் பார்க்கிறேன்
பார்த்தல் ரசிப்பாகிறது
தக தகக்கிறது தன் மீது படும்
மெல்லிய ஒளியை பரிதிபலித்து
இன்னும் சில நொடிகள் ரசிக்கிறேன்
இந்த ரசனை தான் இழுக்கிறது போலும்
விரல்களால் திருகி உடைபடுகிறது
இணைப்புத் தடுப்புகள்...

முதலில் பரவுகிறது நெடி
வேறு வழிகளில்லை
நாசியின் அருகே வைத்து
முழுமையாய் சுவாசிக்கிறேன்
மூச்சுக் காற்றோடு நிறைகிறது போதை
கவிழ்த்து கிடக்கும் சிறு கோப்பைகள்
நிமிர்த்தப் படுகின்றது ஒரு சிணுங்கலோடு...

பாதிக்கும் குறைவாகவே நிரப்பப்படுகிறது
நிறைகிறது குளிர் நீரும் அதன் மீது
மிதக்கும் பனித் துண்டுக்களுமாய்
இப்படியும் ரசிக்க வைக்கிறது
மிக மெதுவாய் மென்மையாய்
உதடுகளில் இணைக்க
நெடி பரவுகிறது நாவில்
தொண்டை நனைக்கும் பொழுது
துடிக்கிறது வெளித் தள்ள...

கண்கள் மூடி ஒரே மூச்சில்
குடித்து நிமிர மீண்டும் நிரம்புகிறது கோப்பை
அருகில் நிறைகிறது மிளகாய்த்தூள் முந்திரி
இரண்டாம் முறை
நெடியுமில்லை துடிப்புமில்லை
மூன்றாம் முறை
நெடி மணமாகிறது
துடிப்பு ஏக்கமாகிறது
மெதுவாய் தொடங்குகிறது தன் வேலையை
எனை நிறைக்கும் அத்திரவம்...

சுற்றம் நினைவிருக்கிறது
உறவுகள் நினைவிருக்கிறது
எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது
காயங்கள் இருக்கிறது
ஏமாற்றங்கள் இருக்கிறது
கவலை கொஞ்சம் தள்ளி இருக்கிறது
தள்ளாடும் உடல்
தாங்கும் மனது
இரவு கவிழ உறங்கி விடுகிறேன்...

ஒரு வேளை நாளையும்
காயங்களையும்
கவலைகளையும்
மறக்க மீண்டும் நான் வரலாம்
ஆனாலும்
பகலெல்லாம் சுமக்கத்தான் வேண்டியிருக்கிறது
நீ உடனிருந்த நினைவுகளை...

Feb 7, 2012

எனக்கான விடியல்...


டாக்டர் சொன்ன
அளவில்
பருக்கை
வாஸ்துக்காரன்
சொன்ன திசையில்
படுக்கை
பஞ்சாங்கம்
ஒப்புக் கொண்ட
நாளில் மட்டுமே
பயணம்
எண் கணிதம்
ஏற்றுக்கொள்ளாவிட்டால்
இன்றைய எனது பெயர்
நாளைக்கு
மாறிப்போகலாம்
சோதிடர் 'எஸ்'
என்றதற்குப் பிறகே
எனக்கு
மிஸ்ஸஸ் ஆன அவள்
வெளியில்
குறித்துக் கொடுக்கப்பட்ட
நாழிகைக்குள்
அவசர அவசரமாய்....
நடந்து முடிந்த
முதலிரவு
என் ஒவ்வொரு
அசைவுகளையும்
யார் யாரோ
முடிவு செய்கிறார்கள்
என் வீட்டு
மின் கட்டணத்தை
முடிவு செய்யும்
உலக வங்கி போல
நாளைக்கு
எனக்கான விடியலும் கூட
ஒரு கடிகார
அலாரத்தின் கையில்தான்.....

-முக நூல் பதிவு அண்ணன் ஜெயக்குமார்..

Feb 6, 2012

தேவதைகள் வருகிறார்கள்...



என் வழியெங்கும் தேவதைகள் வருகிறார்கள்
அவர்கள் தாங்கள் தேவதைகள் என்பதை மறந்து
என்னை சபித்தபடி கடந்து செல்கிறார்கள்
சபிப்பது தேவதைகளின் இயல்பில்லை தான்
இருந்தும் சாபங்கள் நிதர்சனமானவை
தேவதைகளை தேவதைகளாகவே
நம்பிக் கொண்டிருந்தேன் நான்
வரம் மட்டுமே தருவார்களென்றும்
இப்படி ஒரு தேவதையிடம் தான்
முன்பொரு நாளில் மயங்கினேன்
தினமும் வரங்களை பரிசளித்தது தேவதை
மாறாப் புன்னகையுடன் என் துணையுமாய்
நான் அத்தேவதையை நேசித்தேன்
தேவதையை கவிதையாக்கினேன்
தேவதையை கோபப் பட்டேன்
தேவதையைக் கொண்டாடினேன்
எனக்கான பூக்களை தினமும்
தந்து கொண்டே இருந்தது தேவதை
தேவதைகள் என்றுமே பெண்ணாகிவிடுவதில்லை
எனைப் பிரிய முடியா தேவதை
முதலில் தன் வரங்களை நிறுத்திக் கொண்டது
சில நாட்களில் பரிசளித்த வரங்களை
திரும்ப எடுத்தும் கொண்டது
இடைவெளியை விரும்பியது
மறை முகமாய் ஒரு பிரிவின் நாடகம் அரங்கேற
வேறு வழிகளின்றி தேவதையின்
கால்களில் கதறிக் கொண்டிருந்தேன்
கண்ணீரைக் குடித்து விலகி சென்றது
எனக்கான தேவதை
என் வழியெங்கும் தேவதைகளாக
வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
என் மீது சாபத்தை அள்ளித் தெளித்த படி...

பூக்களை சுமந்த பாதை...


எவனோ ஒருவன் தொடர்வது
அனுமானமெனத் தெரிகிறது
நிச்சயம் திரும்பி பார்க்கையில்
அவன் இருக்கப் போவதில்லை
என்னைத் தொடர்வதில்
அவனுக்கு என்ன பலன்?

வேவு பார்த்துக் கொண்டே
குறித்துக் கொள்கிறான்
நான் இடரும் இடங்களில்
நான் நல்லவனா சந்தர்ப்பவாதியா
எனும் அவனது தேடல்
சுத்தமான சுயனலவாதியுடையது...

நான் சந்தர்ப்பவாதியாக
இருக்க வேண்டும் என்பதே அவன் ஆவல்
என்னைக் குற்றவாளியாக்கி
தன்னை சூழல் என்ற பெயரில்
நல்லவனாக்கி கொள்வதே
அவனுள் படரும் ரகசியம்
பேசாமல் இருப்பது போல்
பேசிக் கொண்டே இருக்கிறான்
என் தவறுகளை..

குற்றம் சுமத்தி என்னை
அவனிடமிருந்து பிரித்துக் கொள்வதே
அவன் தேவை எனினும்
அதை அவன் சுலபமாக
செய்துவிடப் போவதில்லை
எப்படியும் என்னில் வழியும்
குருதியும் கண்ணீரும்
அவன் பாதங்களை கழுவ வேண்டுமென
விரும்பி தொடர்கிறான் நிழலென...

முன்பொரு நாளில்
தவறு எனத் தெரிந்த ஒன்றை
இருவருமே தான் செய்தோம்
எனைத் தொடரும் முன்
பிரிய வேண்டும்
பிரிவதற்கென காரணங்கள்
சுடும் கற்களென அடுக்கப் பட
பொய்க் கோட்டைகள் வலிமை படுகிறது...

நம்பிக்கை ஒன்றையே
நம்பிக் கொண்டிருந்த என்னை
அதைக் கொண்டே வீழ்த்த முடிகிறது
கற்பூரம் என்று இல்லாவிட்டாலும்
நான் கழுதையல்ல
புரியும் உணமைகளோடு
இரவுகள் விழிக்கிறது
இருளிலும் தேடுகிறாய்
எனக்கெதிரான சாட்சிகளை...

சரி
இனி நானும் நடிப்பதை தவிர
வேறு வழிகளில்லை
உனக்கென நான் நின்றுவிடுகிறேன்
கூண்டுக்குள்
ஆதாரங்கள் நிரூபிக்கப் படும்
சாட்சிகள் சொல்லுவார்கள்
பிரிவு தீர்ப்பு வழங்கும்
உன் நீதி மன்றம்
மௌனம் சுமந்து நான் வெளியேற
புன்னகையோடு பார்ப்பாய்
இனி எந்தக் கவலையுமில்லை என...

இறுதியாக
உன்னிடம் சொல்ல விரும்புவதெல்லாம்
ஒன்று தான்
இன்றைய உன் புன்னகை
நாளைய கண்ணீரை ஒளித்திருக்கிறது
என் பாதைகளை அடைக்கும் முன்
அவை உனக்கான பூக்களை
சுமந்தவை என்பதையும் நினைவுகொள்...