பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 31, 2011

புத்தாண்டும் ஒரு கொண்டாட்டமும்...


இப்படித்தான் முடிவு செய்தார்கள்
ராசுக் குட்டியும் சுப்புவும்
இப் புது வருடத்தை
எப்படியாவது கொண்டாடி விடுவதென்று
எங்கே போகலாம்
ஊட்டி வேண்டாம் என சுப்பு சொல்ல
கொடைக்கானல் முடிவானது
ராசுக் குட்டியின் மோதிரம் பள்ளிக் கூடம் போனது
சுப்புவோ ஆறுமுறை நடந்து
தின வசூல் கார்த்தியிடம் ஆறு வட்டிக்கு
பணம் வாங்கினான்
விடியால மூனு மணிக்கு பொறப்படனும் மாப்ள
சொல்லி விட்டு போன சுப்பு
ஒரு மணிக்கே தயார்

டவுன் பஸ் லேட்டாகும் நடந்திரலாம் மச்சி - ராசுக் குட்டி
நடந்து வந்து பழனி பஸ்ஸில்
உட்கார்ந்ததும் அர்த்தமாய் சிரித்து வைத்தான் அவனே
அங்கிருந்து எப்படி மச்சி என்றான்
வேற எப்படி மாப்ள இன்னொரு பஸ் தான்
சீட்டு வாங்கும் போது சபித்தான் நடத்துனரை
விலை உயர்வுக்கு காரண கர்த்தாவென
பழனியில் இறங்கியதும்
வரும் போது ஒரு தடவ கோயிலுக்கு
போயிடலாம் மாப்ள...
தேநீரை குடித்து காகித குப்பைகளை எறிய
பஸ்ஸூ வருது மாப்ள - சுப்பு
வேடிக்கை பார்த்து இயற்கை அழகை ரசித்துக் கொண்டே
பத்து மணிக்கு போய் சேர்ந்தார்கள்
மச்சி ஒரு பொகைய போடலாம் டா
ரெண்டு கோல்டு பில்டர் தாங்க
பனிரெண்டு ரூபாய் என்றதும்
இது என்னடா அநியாயம்- மனதுக்குள்
மொதல்ல போட் அவுஸ் போலாம்
பின்னாடி பார்க் அப்புறமா மத்தது எல்லாம்

மணி இரண்டாக
மாப்ள சாப்பிடலாம் வா
மச்சி சும்மா எப்படி வா ஒரு பீரை சாத்தலாம்
இங்கும் முடிவானது
ரெண்டு பீர்
ரெண்டு சாப்பாடு
விதி வலியது என்றது பில் ரூபத்தில்
பார்க் சவுக்கு காடு உச்சி
எல்லாம் சுற்றி முடிக்க மணி எழு
சுற்றி நடந்து களைத்த கால்கள்
தீர்ந்து போன சிகரெட் பாக்கெட்டை தூக்கி எறிய
புதிதாய் மற்றொன்று
எட்டு மணிக்கு ரூம் தேட
கையில் முந்நூறு இருந்தது
வாடகை பீதியை கிளப்ப
அதுவரை தெரியாத குளிர் சில்லிட்டது
ஊருக்கு புதுசா என்று கேட்பது போல
போயிடலாம் மச்சி என
முடிவெடுத்த போது
போயிருந்தது கடைசி பஸ்
ஒரு சின்ன பெட்டிகடையில்
உட்கார்ந்து விசாரிக்கையில்
குரங்கு குல்லாவை மீறி
தாளமிட ஆரம்பிக்கிறது பற்கள்
ஒரு வழியாய்
கூண்டு வைத்த சரக்கு வண்டி வர
நூறு ரூபாய் செலவில் பழனியில் விட
ஊருக்கு பஸ் இருந்தது
பழனி முருகன் புண்ணியத்தில்

கண்ணாடிக் கதவுகளை இறக்கி விட்டு
தனி தனி இருக்கையில் அமர்கையில்
அதன் கிறீச் சத்தம் மட்டுமே ஒலித்தது
பாதி வழியில் அலைபேசியில்
குறுஞ்செய்தி சுப்புவுக்கு
மணியை பார்த்தான் பன்னிரெண்டு
யாரா இருக்கும் என்ற யோசனையில்
செய்தியை விரிக்க
பின்னால் தனியே உட்கார்ந்திருந்த ராசுக்குட்டி
படிக்கிறான்
“விஸ் யு ஹாப்பி நியூ இயர்”
ஆங்கிலத்தில்
...
..
.
“விஸ் யூ த சேம். தாங்க் யூ”
பதிலனுப்பி விட்டு கண் மூடுகிறான்
ஊர் வந்து சேர்ந்தது
சைகளலால் விடை பெறுகிறார்கள் ...
எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில்
கொடைக் கானல் அழகையும்
புத்தாண்டு கொண்டட்டத்தையும்
நண்பர் கூடுமிடத்தில் இருவருமாய்
அதீத கற்பனைகளோடு
விவரிக்கக் கூடும்...

”இனிய புத்தாண்டு வாழ்த்துகள்”

கனவுப் பிரதி...


நிசப்தங்களின் வெளியில் பேசிக் கொண்டே அலைகிறது
எல்லைகளற்று விரியும் மௌனத்தின் குரல்
சற்று தொலைவில் ஒரு விண்மீனையோ
அகன்று விரிந்த வானத்தின் நீட்சியினையோ
தேடத் துவங்குகிறது தனிமை குரலின் பிரதிகள்
எதிலுமே லயித்து விடா மனதை வெகு விரைவில்
அணைத்துக் கொள்கிறது பெருவெளியின் தனிமை
காற்றையும் மரங்களையும் பூக்களையும்
வருடிய விரல்கள் நதியில் குளித்து நீள்கிறது
சூரியனின் கிரகணங்களில் குளிர் காய
இதுவரை ஆசுவாசப்படுத்திக் கொண்ட கனவுகள்
கடந்து செல்வதை வேடிக்கை பார்க்கிறேன்
முன்னொருமுறையும் இப்படித் தான்
யாருக்கும் தெரியாமல் என் கனவுகளை ஒரு
மூடியிட்ட கண்ணாடி புட்டிக்குள் அடைத்தேன்
மயங்கி மயங்கி ரசிக்கும் இரவுகளில்
அதீத ஒளி வெள்ளம் பரவி நனைக்கிறது என்னை
நொடி முட்கள் கடக்கும் ஒசையில் தெளிவாகிறது செவி
தூரத்தில் ஒலிக்கிறது நான் என்றோ அழுத குரல்
எல்லாவற்றிலும் சேர்ந்து கொண்ட பிரம்மையில்
எதிலுமே இல்லாமல் தனித்திருக்கிறது மனம்
எதிரெதிர் திசையில் ஒற்றையடிப் பாதையில் பயணிக்கும்
நினைவுகளும் கனவுகளும் முட்டி மோதி நிற்கிறது
சமரசங்களை விரும்பாமல்
ஆகச் சிறந்த நூலகத்தில் யாருமறியா ஒன்றாய்
தூசிகளுடன் காத்திருக்கிறது என் கனவுப் பிரதி
....
...
..
மேலும் மேலும்
சொற்களை அலங்காரமாய் நிரப்பி
நீ இல்லா துயரமொன்றை தொலைக்கும்
அக் கணத்தில்
உன் நினைவுகளின் வெளிக்குள்
உலகொன்றை நெய்கிறது கனவு
தொலைந்து போவதற்கு கூட
உன்னைத் தான் தேட வேண்டியிருக்கிறது...

Dec 10, 2011

கானல்நீரும் தாகமுமாய்...


என்றுமே பலித்துவிடாத
கனவுகள் நினைவெங்கும்
சிதறிக் கிடக்க கதறி அழுகிறேன் உன்னிடம்
சில நேரங்களில் உன் தோள் சாயல் கூட
ஆறுதலாய் இல்லை
எழுந்ததும் உன்னை பிரிய நேரிடும்
அச்சம் சுமந்த மனதில்
அடிக்கடி நீ சொல்லும் கானல் நீர்
மட்டுமே தெரிகிறது
எல்லா கவசங்களையும் மீறித்
துளைக்கிறது சில கூர் அம்புகள்
நியதிகளின் பெயரில்
அறுந்து தொங்கும் சதைகளுடன்
பயனற்று கிழ் விழவும்
தாங்கிப் பிடிக்கிறது அதே கானல்வெளி
எரியும் உடலுடன் சுற்றி சுற்றி
வெறும் கைப் பிடி சாம்பலென
உதிரும் வேளையில் வருகிறது தென்றல்
உன் வாசலில் தூவ
கனவுகளை எல்லாம் புதைத்துக் கொள்கிறேன்
நினைவுகளையெல்லாம் தூக்கிலிட்டு
இனி என்ன
கானல் நீரும்
அதன் மீதான தாகமுமாய்
மீண்டும் மீண்டும்
தொலையட்டும் வாழ்வு
சாவுக்கும் வாழ்விற்குமான
இடைவெளிகளை நிரப்பிக் கொண்டே...

ஆபிஸில் மதிய உணவு நேரம்


அவன் நிறுத்தாமல்
பேசிக்கொண்டே இருந்தான்.
திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர்
அறுசுவை உணவு வகைகள்
அவியல், பொறியல்
சட்னி, சாம்பார் சாதம், தயிர்ச்சாதம்,
அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய்
இத்துடன்
தித்திக்கும் இனிப்பில்
இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் மணம்.

சாப்பிட்டுக்கொண்டே
அவன்
அவன் மனைவியைப் பற்றிக்
குறைபட்டுக்கொள்கிறான்.
அவள் - அறிவிலியாம்.
சோம்பேறியாம்
குண்டாம்
பார்க்க சகிக்கலையாம்
முட்டாளாம்
நடனங்கள் கண்டதில்லையாம்
சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம்
ஏன்..
மாசாலா டீ னா கூட
என்னவென்று தெரியாதாம்
அவளுடன் வாழும் வாழ்க்கை
வெறுத்துவிட்டதாம்
ஆனாலும் ஆனாலும்
என்ன செய்வது
குழந்தைகளுக்காக
குடும்ப கவுரவத்திற்காக..
என்றவன்..

என்னைப் பார்த்து
சொன்னான்..

நான் புத்திசாலியாம்
அறிவுஜீவியாம்
ஆபிஸ் வேலை
வீட்டு வேலை
இரண்டிலும் கெட்டிக்காரியாம்
சம்பாதிக்கிறேனாம்
கவிதை கூட எழுதுகிறேனாம்
என் கணவர் ரொம்பவே
கொடுத்து வைத்தவராம்...

நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்..

அன்றுமாலை
என் கணவருக்குப் பிடித்தமானதை
சமைத்துக் கொண்டிருக்கும்போது
அவர் ஆபிஸ் பையன்
கழுவப்படாத டிபன் பாக்ஸை
என்னிடன் நீட்டிவிட்டு
சொல்லிச்சென்றான்
'பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று'

-பிரதிபா கன்னடக்கவிதைகள்
மொழியாக்கம்: புதியமாதவி.