பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Nov 13, 2011

காத்திருக்கிறாள்

எப்பொழுதும்
பெண்ணொருத்தி காத்திருக்கிறாள்
வாசல் படிகளில்
மழைகாலத்தில் குடையொன்றை தாங்கியபடி
கண்களில் மின்னி மறையும் கனவுகளோடு
கூர்ந்து நோக்கும் விழிகளில் வெறுமையோடு
ஒற்றை மலரோடு இல்லை மல்லிகை சரங்களோடு
மற்ற அனைவரையும் போலவே
குழந்தை நினைவுகளோடு
இன்னும் இன்னும்
நிறைய சொல்ல முடியா
சோகங்களோடும் மகிழ்வுகளோடும்
பெண்ணொருத்தி காத்திருக்கிறாள்
வாசல் படிகளில்...

சிறு துளிகள் - மூன்று

தனிமையில் விடப்பட்ட
பிறகும் செவிகளில்
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது
உன் குரல்....
விடிய விடிய பேசிக் கொண்டிருந்தோம்,
கூடவே நம்மை ரசித்துக் கொண்டு
மழை....
தனிமை பொழுதுகளிலெல்லாம்
என்னை நீயாக மாற்றி விடுகிறாய்,
சில நேரங்களில் உன்னை நானாகவும்...
மழைக் குளிரால்
நடுங்கிக் கொண்டிருந்தது ஊர்,
நம்மைச் சுற்றி கததப்பாய்
நெருப்பு வளையம் செய்தது காதல்...
மழை நனைந்து,
நீ நம் அறை நுழைகையில்
காதோரம் வழியும் மழைநீரில்
கூடவே இறங்கி தடுமாறுகிறது என் காதல்...
நீயாக இல்லையென்று சொல்லி
பிரிந்து போகும் வரையில்
நான் தந்தையாகத் தான் இருந்தேன்...
விடுகதைகளுக்கு விடைகளை
யோசிக்கும் பொழுதெல்லாம்
கண்களை மூடிக் கொள்ளும் வழக்கத்தை
எங்கு கற்றுக் கொண்டாய் நீ...
ஒரு கவிதையை உனக்கென எழுதி,
உன் வருகைக்கு காத்திருக்கையில்
ஓராயிரம் கவிதைகள் மனதில்...
நானின்றி நீ அங்கு
என்ன நினைப்பாயோ,
அதையே தான் நானும்
இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறேன்....
நீ இல்லாத சில நாட்களில்
நான் வாழவே இல்லையென்பது
உனக்கு தெரியும் தானே...
கோயிலுக்கும் பொம்மைக்கும்
பெயர் பெற்ற ஊரில் நீ இருந்திருந்தால்,
சிலைகளும் பொம்மைகளும்
உன்னைப் போலவே இருந்திருக்கும்...
நீ என்ன செய்தாலும்
உன்னை விட்டு ஒரு நொடி கூட
விலக விடாதிருக்கிறது
உன் அன்பு...
எப்பொழுதும் இழப்புகளே
மிஞ்சுகிறது சமரசங்களற்ற வாழ்வில்,
இருந்தும் தேடிக் கொண்டுதானிருக்கிறேன்
உன் சுவடுகளை வாழ்வெங்கும்....

சிறு துளிகள் - இரண்டு

எனக்கென நீயும்
உனக்கென நானும்
வாழ்ந்தது போதும்...
எனக்குள் நீயும்
உனக்குள் நானுமாய்
வாழ்வோம் இனி...

உன்னுடன் பேசாமல்
இருக்கும் நாட்களில்
உன்னை நினைத்துக்
கொண்டிருப்பதை தவிர
வேறு எதையும் செய்வதில்லை நான்...
நீ இன்றி நான் வாழ முடியாது
சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
நீ வந்துவிடவில்லை
நான் செத்துவிடவில்லை
நம்மைப் பார்த்து சிரிக்கிறது
காதல்...
நீ
இந்த ஒற்றை எழுத்தின்
வளைவுகளில் கூட சிக்கிக் கொண்டு
துடிக்கிறது இங்கொரு உயிர்...
என் எல்லா தவறுகளையும்
சரியாக்கியவள் நீ...
நீ போன பின்பு
தவறுகளே அற்ற வாழ்வு
மிகக் கொடுமையாய்...
வன்மையான சொற்களும்
கொடுமையான மௌனங்களும்
உன் மென்மையான இதழ்களுக்கு
கொஞ்சம் கூட பொருந்தவில்லை...
நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?
ஆம்....
ஏனெனில்
அது மகிழ்சியாக நடிப்பதை விட
சுலபமானது...
உனக்கும் எனக்குமான
சில ரகசியங்களை
நீ மழையிடம் சொல்லி இருக்கிறாய்
நதியிடமும்
ஒரு இசை தட்டிடமும்
மூன்றுமாய் எனை கேலி செய்ய
இனி நான் நம் ரகசியங்களை
கடலிடமும்
பறவைகளிடம்
சொல்லப் போகிறேன்...
வருந்திச் செல்கிறது
ஒரு மனங் கொத்திப் பறவை...
உன்னை விட
என் மீது அன்பு செலுத்த
வேறெவரும் இல்லையென.....
என்னை விடவும்
எனக்கு நெருக்கமானவள்
நீ...
கல்லறை வாசகத்தை தேர்ந்தெடுக்க முடியுமென்றால், இந்த வாசகங்களை செதுக்க நான் கேட்டுக் கொள்வேன்...

" அவன் இறந்துவிட்டான் - உயிருடன் இருக்கும் போதே..."
தினமும் கதறி
அழுவதை வேடிக்கை
பார்த்த பின்னரே
தாலாட்டை துவங்குகிறது
இரக்கமற்ற இரவுப் பொழுது..
இப்படித்தான்
அன்பு தொலைந்து போகிறது
இந்த நேரத்தில் அன்பு செலுத்த வேண்டும்
இத நேரத்தில் அன்பு செலுத்தக் கூடாது
என்கிற விதிமுறைகளுக்கான விதிகளை
நாம் விதித்துக் கொள்கிற
நிமிடங்களில்...
நாம் சண்டை போட
காரணங்களே தேவை இல்லை
காதல் மட்டுமே
போதும்...
தேவையற்ற காரணத்தைச் சொல்லி
அலைகிறேன்
உன் வீடிருக்கும் தெருவில்
உனைப் பார்த்து விட...



Nov 4, 2011

ஈக்கள் மொய்க்கும் கனவு...



வலிகளை சுமக்கும் மனதில்
தொலைந்து போன புன்னகையின்
ஆறா ரணங்களின் சுவடுகள்...

ஒவ்வொரு முறையும்
நிரம்பி வழிகிறது
உனக்கான என் கண்ணீர் துளிகளின்
நினைவு அணைக்கட்டுகள்...

அழகாய் கிறுக்கலாய்
என எதை எழுதினும்
எப்படியும் வந்து விடுகிறது
உன் பெயரின் சில எழுத்துகள்...

கட்டுப்பாடுகளற்ற வெளிகளில் திரிகிறது
பசித்த மிருகமென
சிவக்கும் விழிகளுடன்
என் மீதான உன் கோபங்கள்...

ஆயிரம் காரணம் சொல்லி
தனியே விடப்பட்டு ஒரு நாள்
இதே தனிமை சிறையில் அடைபடுவேன்
என் நிறைவேறாக் கனவுகளோடு...

எல்லோருக்கும் பிடித்திருக்கும்
என் மனதின் வரிகளை
உனக்கு பிடிக்காமல் போனதில்
வருத்தம் தான் எனக்கு...

எல்லோருக்கும் தெரியாமல் போன
என் மனதின் வலிகளை
நீ மட்டுமே கண்டுகொண்டதில்
சிறிது நேர துயரம் உனக்கு...

முடிவை நோக்கிய கவிதையொன்றில்
இன்னும் நீள்கிறது முடிவுகளற்ற
நீ விட்டுச் சென்ற
தனிமைக் குரலின் கேவல்...

வறண்டு விட்ட குருதியை
சுற்றி மொய்க்கும் ஈக்களென
ஒரு நாள் என் கவிதைகளைச்
சுற்றி கொண்டிருக்கும் உன் விருப்பங்கள்...

நிர்பந்தமென விலகி நிற்கவும்
நினைவுகளைச் சுமக்கவும்
ஏதாவது ஒரு உயிர் கனவு
பலியிடப் படுகிறது ஒற்றை நொடியில்...

வானவில்லென ஒரு கனவும்
தீராத காதலையும் தவிர்த்து
நிறைய தேவைப் படுகிறது
இன்றைய வாழ்வின் தேவைகளுக்கு...