பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 4, 2011

காத்திருப்பு...


கண்கள் ஒளிரக் காத்திருக்கிறது
பூனையொன்று பாலின்
வாசத்தை நுகர்ந்த படி
நானும் காத்திருக்கிறேன்
என் பாதி உறக்கத்தில்
உருளப் போகும் பாத்திரங்களின்
சப்தங்களை எதிர்பார்த்து...

Oct 3, 2011

சாபக் கனவுகள்


உனக்குள் புதைந்து கிடக்கும்
கவிதைகளை விட நான் ஒன்றும்
பெரிதாய் எழுதி விடப் போவதில்லை
உன்னைப் பற்றி...

பிடித்திருக்கிறதா என்ற கேள்வியுடன் நான்
ஆம் என்ற பதிலுடன் நீ
இருவருமாய் காத்திருக்கிறோம்
ஒரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி...

ஒருவேளை இந்த நேரத்திலும்
உன் விரல்கள் அனிச்சையாய்
தடவிக் கொண்டிருக்காலாம்
அலைபேசியில் என் எண்களை...

உன் மெல்லிய உதடுகளை
வருடும் போது என் விரல்கள்
உதிர்ந்து விட்ட ஒரு
மயிலிறகாய் மாறி விடுகிறது...

என் கவிதைக்கான முதல் தேடல்
காலையில் உன் நெற்றியில் நான் இடும்
குங்குமத்தின் சிறு வட்டத்தில்
தொடங்கி விடுகிறது...

நாம் இருவருமாய்
இணைந்து ஒரு மழை நாளில்
பார்த்த வானவில்லில்
பதினாறு வர்ணங்கள்...

நம்முடைய வாரிசை நீ
சுமப்பதை என் தோள்களில்
சாய்ந்து கொண்டு சொன்ன போது
நான் பார்த்தது இவ்வுலகின்
அழகான வெட்கம் ஒன்றை...

இன்னும்
இன்னுமாய்
ஏராளமான கனவுகள்
கொட்டிக்கிடக்கிறது என்னில்
உன்னை சேரும் பாதைகள்
அடைபட்டு கிடக்க
வாழ்வின் சாபங்களாகவும்....

Oct 2, 2011

நானும் ஒரு பறவையும்...


எத்தனை எதிர் பார்ப்புகளுடன்
கிழித்தாலும் நாட்காட்டியில்
திரும்பியா வரப் போகிறது
உன்னோடு நானிருந்த நாட்கள்...

ஒளிந்து விளையாடும்
விளையாட்டில் நீ எப்பொழுதும்
ஒளிந்து கொள்கிறாய்
நான் தேடுவதாய் நடிக்கிறேன்...

ஒரு கவிதையாவது
எழுதி விட வேண்டும்
உன்னைப் பற்றி நினைக்காமலோ
வார்த்தைகளுக்குள் அடைக்காமலோ...

உனக்கும் எனக்குமான
இடைவெளியில் நிறையும்
கனத்த மௌனங்களிடையே
ஒரு கடலின் ஓயாத அலைகளின் ஓசை...

நமக்குப் பிறக்கப் போகும்
குழந்தைகளின் சிரிப்பால்
இன்றைய என் உறக்கத்தின்
கதவுகளை திறக்கிறேன்...

கனவின் ஒரு முனையில் நீயும்
மறு முனையில் நானுமாய் காத்திருக்க
முடிவின்றி நீள்கிறது
நம் தனிமை இரவுகள்...

என் நினைவுகளில் ஒரு
மரமும் அதில் அழகான பறவையும்
எப்பொழுதும் பறக்கலாம்
என்னை தனிமையில் விட்டு விட்டு...

Sep 29, 2011

தொலைத்து விட்ட சித்திரங்கள்...


பேருந்தில் குழந்தையொன்று
பின் நோக்கிச் செல்லும்
மரங்களுடனும்
செடிகளுடனும்
பேசிக்கொண்டே வந்தது...
காற்றில் அலையும்
கைகளில் புதிதாய்
சிதறிக் கொண்டிருந்தன
பல நூறு வண்ணங்கள்...
புன் சிரிப்பில்
தெறித்து விழுகிறது
காணமல் போயிருந்த
நிலவொன்று...
யாருக்கும் புரியாமல்
போக
நான் ரசித்து கொண்டிருந்தேன்
அதன் விரல்களில்
உருவாகி மாறிக் கொண்டே
இருந்த
சித்திரங்களை...
ஒரு வேளை
நானும் தொலைத்திருக்கலாம்
அக் குழந்தை ரசித்துக்
கொண்டிருக்கும்
இயற்கையின் ரகசியங்களை...