பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 14, 2011

சொல்லாமல்....


உன் வீட்டு முகம் பார்க்கும்
கண்ணாடி முன்பு
நின்று கொண்டு சொல்!
உன்னுள் இருக்கும்
என் பிம்பம் அருகில் தெரியலாம்
ஆன்மாவின் பிரதிபலிப்பாய்!!

சில நொடிகள் மட்டுமே
பார்த்த முகத்தை
ஒவ்வொரு நொடியும் நினைத்துக்
கொண்டிருக்கும் நினைவுகளுக்கு
என்ன பெயர் வைப்பது!!

உன் மௌனங்களைக் கூட
மொழி பெயர்த்து கவிதை என்றேன்!
இனி என் மௌனங்களை
உன்னிடம் தருகிறேன்
கவிதை சொன்னாலும்
காலில் இட்டு மிதித்தாலும் சரியென!!

இலட்சியங்களோடு
வாழும் உனக்கு
இலக்குகளே இல்லாத
என் பயணங்கள்
வேடிக்கையாய் தோன்றுவதில்
வியப்பேதுமில்லை!!

சிறிய பறவை எனினும்
வானின் நீளங்களை
அளந்து திரிந்தவன்!
என் சிறகுகளை நானே
வெட்டிக் கொள்ளும் துயரம் இது!!

வார்த்தைகளின்
பின்னால் மட்டுமே
ஒளிந்து கொண்டவன் இன்று
வாழ்க்கை பிடிக்காமல்
ஒளியும் நாட்களில்!!

அன்பென்று கூறி
தங்கத்தில் பூசினாலும் சிறைகள்
தண்டனை தான்
இனி சிறைகளும் இல்லை
காவலும் இல்லை உனக்கு!!

உன்னை கவிதையாக்க
முயன்று தோற்றுப் போயிருக்கிறேன்
உனக்குத் தெரியும்
என் கவிதைகளுக்கு
தெரியுமா என்ன!!

எனக்குத் தெரிந்ததெல்லாம்
வெறும் வார்த்தைகளே
யதார்த்த வாழ்வென்று
நீ சொன்ன சமன்பாடுகள் அல்ல!!

வெறும் காற்று தான்
தென்றலாகவும்
புயலாகவும்
நீயே சொல்
நான் எதுவென்று?

எப்பொழுதுமே பிரிவில் தான்
புரிகிறது
பிரிக்க முடியாத
உறவுகளின் வலி!

எப்பொழுதும் சொல்லாமல்
புரிந்துகொள் என்பாய்
ஆம்...
என் அமைதியையும்
இனி நீயும்!!

Sep 13, 2011

நாளைக்கென...


விழியில் ஒளியும் நிறங்களை எங்கு தேட...
இன்னும் ஒருநாள் தேவைப் படுகிறது
உன் மீதான கோபத்தை நியாயப் படுத்த...
நெடுஞ்சாலையின் ஓரத்தில்
சிரிக்கும் மஞ்சள் மலர்களில் நிறைகிறது
அலைபேசியின் நினைவகம்...
பூனைக் குட்டிக்கான தட்டில் பால்
கண்டு அழுகிறது பக்கத்து வீட்டு குழந்தை...
உருமாறிக் கொண்டே அலைகிறது மேகம்
மேகமாகவே தோன்றுவது எப்பொழுது...
உதிரும் விண்மீன்களில் லயித்து
கூடவே உதிர்கிறது மனசு...
ஒவ்வொரு நாள் முடியும் போதும்
நாளைக்கென சில விஷயங்கள் பத்திரமாய்...
சிரிப்புகளுடனே கலந்திருக்கிறது
சில கண்ணீர் துளிகளும் சோகங்களும்...
விடைபெறும் வேளை வரும் பொழுது
அழும் மனதும் சிரிக்கும் உதடும் நம்மிடம்..
தெரிந்து கொள்ள வேண்டாம் என நினைக்கும் பொழுது
அதீத ஆர்வம் உள்ளுக்குள் துடிக்கிறது...
எதை எதையோ எழுதிக் கொண்டு விரல்கள்
என்ன செய்து கொண்டிருப்பாய் என
யோசிக்கும் மனதுடன்...

Sep 11, 2011

திசைகளற்ற பறவையென


சரி என்று சொன்ன ஒற்றை நொடியில்
துவங்கும் புதிதாய் ஒரு பயணத்தில்
இழக்க நேரிடுகிறது
திரும்ப இயலா சில இடங்களையும்...
இரு உயிர்களின் கலத்தலை விட
கடினமானதாகிறது
இரு மனங்களின் புரிதல்களும்
தேடல்களும்...
வேறு வழிகள் இன்றி
சமரசங்களில் நீந்தி
கரை சேர்வோம் இருவரின்
கட்டப் பட்ட கைகளுடன்...
எனக்கான கவிதைகளும்
மெல்லிய இசைகளும்
இன்று வரை
உன்னை சேரவே இல்லை...
உடலின் வெப்பத்தில்
குளிர் காய்ந்த பொழுதில்
சில நேரம் மகிழ்வும்
பல நேரம் வெறுப்புமாய்...
இருந்தும் என்ன
அன்பை பகிரவும்
என்னை நேசிக்கவும் புதிதாய்
ஒரு உயிர் உன்னைப் போல...
வரவு செலவு
கணக்குகளில்
கழிந்து கொண்டே போகும்
காலங்கள்...
சுமைகளுடன் நான் திணறிய
கணமொன்றில் நீ
தாங்கிப் பிடிக்கிறாய்
கடமைகளின் கரங்களில்...
புதிதாய் உடைகளும்
அணிகலன்களும்
வித விதமான உணவுகளுமாய்
உறவுகளின் கூடுதலுமாய்
சுகமே என் சூழல்கள்...
திசைகளற்ற பறவையென
ஒவ்வொரு முறையும்
உன் கூட்டிற்கே வருகிறேன்
தாய்ப் பறவையென மாறிய பின்...
உன் நேசமும்
பாசமும் பொய்யென
போய் விடப் போவதில்லை...
இருந்தும்
என்னை ரசிக்கும்
எனக்கான கவிதைகளை
வார்க்கும் ஒருவனை
ரகசியமாய் வளர்க்கிறேன்
உனக்கு தெரியாமல்
எனக்குள்ளே...
என் தனிமைக் கனவுகளையும்
கையிலிருக்கும் மலர்களையும்
அவனுக்கென்றே
வைத்திருக்கிறேன் எப்பொழுதும்...

புரிதல் என்பது


ஜன்னலின் ஓரங்களில்
தேங்கி நிற்கும் மழைத்துளிகளில்
புதிதாய் ஒரு கடல்
அதனுள் நான்...
எதிர்பார்ப்பதும்
ஏமாறுவதும்
என் தொழில்
அதை ஏன் எச்சரிக்கிறாய் நீ..
உன்னிடம் எதிர்பார்க்காமல்
யாரிடம்?
புரியவில்லை எனக்கு
உன் வார்த்தை சூட்சமங்கள்...
சொல்லிப் போவதிலும்
சொல்லாமல் போவதிலும்
வேறுபாடுகளே இல்லை
சொல்வதை கேட்கிறேன்
என்பதை தவிர...
காத்திருத்தல் என்னில் ஒரு
மோசமான வியாதி
காத்திருக்கிறேன்
சரியான ஒரு தவறுக்கு...
நீயாகப் புரிந்துகொள் என்பாய்
புரிதல் என்பது
நானாக கற்பனை செய்வதல்ல
உன்னிடமிருந்து
தாமதமாக தெரிந்து கொள்ளும்
உண்மை மட்டுமே...
எல்லோரிடமும் சொல்ல முடியாததை
உன்னிடம் சொல்கிறேன்
என்னிடம் சொல்ல கூடாதென
சிலவற்றை நீ எப்பொழுது
வைத்திருக்கிறாய் உன்னுள்...
நதியின் கரையில்
கட்டுண்ட பரிசலென
எப்பொழுதும்
உன் வாழ்வின் ஒரு ஓரத்தில்
மட்டுமே கட்டப் பட்டிருக்கிறேன்...
கடல் ஒன்றின்
ஓரத்தில் ஒதுங்கிய
கிழிஞ்சலென மணலில்
புதையுண்டே கிடக்கும்
என் புதைபடா நேசமும்...
ஜன்னலோரத்தில்
தேங்கும் கடல் வடிகிறது
உன்னிடம் சொல்ல
இன்னும் ஒன்று
எனக்கென நான் சிரித்து
எத்தனை நாட்கள் ஆனது?