பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 23, 2011

இடைவிடாத ஏக்கங்கள்


ஒரு நாளின் நள்ளிரவுப்
பொழுதின் தொடக்கத்தில்
உன் கன்னத்தில் பதித்த
முத்தத்தின் ஈரத்தை
சுமந்து திரிகிறது உன்
வீட்டு வரவேற்பறை காற்று...

மின்னலென பார்வைகள்
புன்னகைகள்
ஆதரவாய் தலை கோதிய
விரல்களென அத்தனைக்கும்
ஆசைப் படுகிறது
விலகி வந்த உயிரொன்று...

நிலவின் ஒளியில்
பார்த்த உன் முகத்தை
பகல் பொழுதில் புகைப் படங்களாக்கி
ரசித்து மகிழ்கிறது
இடைவிடாத ஏக்கங்கள்...

வறண்டு போன பாலை நிலத்தில்
சிறு சாரலென நீ பொழிந்து போன
மழையில் மலர்ந்திருக்கிறது
சில கனவுப் பூக்கள்
ஒரு வேளை நாளைய
கண்ணீர் பூக்களாகவும்
இருக்கக் கூடும்....

மழை கானா பூமியில்
சுமக்கும் குடையென
உன் நினைவுகள்
பாரம் என தூக்கி
எறிய முடியவில்லை என்னால்...

நேசிப்பதற்கு எப்பொழுதுமே
இரண்டு இதயங்களும்
பிரிந்து செல்ல ஒரு
இதயமுமே
போதுமானதாக இருக்கிறது...

என் நினைவுகளில் நீ
அங்கு விழித்திருக்கலாம்
நமக்கான கனவுகளோடு
நானும் இங்கு விழித்திருக்கிறேன்
உனக்கான கவிதைகளோடு...

ஒற்றை காகமென


அன்புத் தோழியே
நலமா...
நாம் பேசிக் கொண்டிருக்கும்
இந்த நாட்களிலேயே
உன்னுடன் பேசாமல்
சில எண்ணங்களை
ஒளித்துவைக்கிறேன் நீ
வேதனை கொள்வாய் என...
மாற்றிக் கொண்ட
மின்னஞ்சல் கடவுச் சொற்களோடு
காணாமல் போயிருக்கும்
என் மீதான
உன் நம்பிக்கைகளும்...
பணியின் நெருக்கடிகளும்
உறவுகளின் கண்டிப்புமாய்
இனி பேச்சுக்கள்
குறுஞ் செய்திகளாகும்
நாட்களை எதிர் நோக்கி என் காலம்...
என்ன செய்வது என்று
எனை கேட்கும் கேள்விகளில்
மறைந்திருக்கிறது உன் தவிப்பு...
கொடுத்து விட்ட மனதிற்கு
காதலை பெற்றதன்
விலையாக பறி போகலாம்
நம் பெயர் சொல்லாத உறவு...
தினமும் என் அலைபேசியில்
ஒலிக்கும் உன் குரல்
நினைவில் படிந்து
நீங்க மறுக்கும் கனவெனப்
போய்விடுமா என்ன?
நடு இரவில் கரைந்து
செல்லும் ஒற்றை காகமென
அலைகிறேன் வெளியெங்கும்
நம்மைச் சுமந்து கொண்டு
நீ வரும் நாள் ஒன்றை எதிர் பார்த்து...
வரா விட்டால்
ஆறுதல் சொல்லி விடாதே
எனக்கு தெரிந்தே இருக்கிறது
என்னை நேசிக்கும்
எல்லோரும் தயாராய்
வைத்திருக்கிறார்கள்
பிரிந்து செல்வதற்கான
ஒரு காரணத்தையும்....

Aug 22, 2011

நினைவுகளின் மிச்சத்தில்


ஒவ்வொரு நாளின்
முன்னிரவுப் பொழுதுகளில்
நான் விழித்திருக்கக் காரணம்
நீயாகவும் இருக்கலாம்....
இதுவும் கடந்து போகும்
நிலையில் இல்லை நான்
எதையும் இழக்கா
நினைவுகளின் மிச்சத்தில் ...
இதே தெருவில் ஆயிரம் முறை
நடந்தவன் தான்
நீ இல்லாத இந்த நாட்களில்
கொதித்துக் கிடக்கிறது
தெருவும் நீ நடந்த இதயமும் ...
உறக்கம் தொலைக்கும் இரவுகளில்
நிலவை ரசிக்கும் மழலையாய்
உன் நினைவுகளை
ரசிக்க பழகி விட்டேன்
ஒரு வேளை நீயும்
வாழ்வின் விதிகளால் கட்டுண்டு
அதே தெருவில் விட்டு
வந்திருக்கலாம் எனக்கான உன்னை..






Aug 13, 2011

மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?


ஆகவே தான் கேட்கிறேன் நீங்கள்
மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா என்று?
அவர்கள் எப்பொழுதும்
நிலைத் தன்மையையும்
நம்பிக்கையையுமே எதிர் பார்கின்றனர்
நானோ சாகசத்தையும்
தெரியாத புதிரையும்...
நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்
நானும் உங்களை..சரி தானே!
தோழமை உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்றால்
"ஆமாம்" என்பேன்
நீ இல்லாமல் தனியாக வாழ முடியுமா என்றால்
அதற்கும் "ஆமாம்" என்பேன்...
ஆண்களே எப்பொழுதும்
ஒரு வீட்டை நிர்வகிக்க
காதல் செய்ய
குழந்தைகளை வளர்க்க
பணம் சம்பாதிக்க
வெற்றியாளராக விளங்க
அனைத்துமாய் எதிர் பார்க்கப் படுகிறான்..
உங்கள் நாடி நரம்புகளில்
பரவசம் ஓடிக் கொண்டிருக்க வேண்டுமென்பதே
உங்கள் விருப்பமாய்...
ஆனால் அதில் ரத்தம் தான்
ஓடிக்கொண்டிருக்க வேண்டுமென்பதை
மறந்து விடுகிறீர்கள்...
நான் வற்புறுத்தினால்
எப்பொழுதும் இல்லாத ஒன்றைப் பற்றி
அதிக பணமும் சுதந்திரமும் வேண்டும் இல்லத்தரசி
காதலியை இழந்து விடுவோமோ என
பயந்து கொண்டிருக்கும் காதலன்
விரும்பிய பேரத்தை முடிக்காத வியாபாரி
பாடகராக விரும்பும் வைத்தியர்
அரசியல்வாதியாக விரும்பும் பாடகர்
விவசாயியாக விரும்பும் எழுத்தாளன்
இப்படி என்னவெல்லாமோ...
ஆகவே உங்களை மீண்டும்
ஒருமுறை கேட்கிறேன்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?